Tuesday 10 January 2012

கர்மவீரர் காமராசர்!


முதல்வராக இருந்த போதும் அன்னையே கேட்டபோதும் 
முப்பது ரூபாய் கூடுதலாகத்தர மறுத்தாய் அன்று
வட்டச் செயலாளர்கள் கூட வாரிசுகளுக்கு
வளைத்துப் போடுகின்றனர் சொத்துகளை இன்று


இலவசக் கல்வி வழங்கிட அரசுப்பள்ளிகளை
எங்கும் தாராளமாகத் திறந்து வைத்தாய் அன்று
அரசுப்பள்ளிகளை மூடி தனியார் பள்ளிகள்
அளவின்றி தாராளக் கொள்ளைக்கு வழிவகுத்தனர் இன்று

வெள்ளையனே வெளியேறு என்று வீரகோசமிட்டு
வாள் ஏந்தி போராடி வரலாறு படைத்தாய் அன்று
வெள்ளையனே வருக கொள்ளையடித்துச் செல்க 
விரிக்கின்றனர் ரத்தினக்கம்பளம் இன்று

விவசாயத்தின் மேன்மையை உணர்ந்து நீ
விணாய் தரிசாக இருந்தவற்றை விளைநிலமாய் மாற்றினாய் அன்று
விளை நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
வாரி வாரி வழங்கி கையூட்டு பெறுகின்றனர் இன்று

தொழிற்சாலைகள் புதியன பல தொடங்கி நாட்டில்
தொழிற் புரட்சியை தொடங்கி வைத்தாய் அன்று
உள்ளுர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு
உலகத் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர் இன்று

அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவருக்கும் அன்போடு கற்பித்தாய் நீ அன்று
அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம்
அனைவரிடமும் காணாமல் போனது இன்று

-கவிஞர். இரா.ரவி

No comments:

Post a Comment

Next previous home